mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / இறங்கி…செய்வோம் – சிறுகதை

இறங்கி…செய்வோம் – சிறுகதை


ஆயா…நல்லாக்கீரியா…?

குரல் வந்த திசைகேட்டு மெல்ல நிமிர்ந்த வயதான அந்த அம்மாவுக்கு எப்படியும் அறுபது தாண்டியிருக்கும்

இன்னா..ஆயா உன்னத்தான் நல்லாக்கீரியா மீண்டும் கேட்டான் அந்த இளைஞன்.

யாரு நைனா நீ என்றாள் தன் எதிரே நின்ற இளைஞனை பார்த்த படி சற்று தடுமாற்றமாக

அட இன்னா..ஆயா நா..இங்கத்தான்கீரேன் போன மாசம் எங்கா ஆயா போனதுல இருந்து உன் வயசு ஆயாவப்பாத்தாலே… ப்ஃபீலாக்கீது அதான் ஒரு தபா பேசிட்டு போலான்னு வந்துகீரேன் ஒனக்கு பேஜரா இருந்தா சொல்லு புடுறேன்..என்றான்.

அய்யோ…இல்ல நைனா எவனும் இந்த அனாதிய க்கீரேனா புட்டுகினேனான்னு எட்டிக்கூட பாக்க மாட்டானுங்க தபால்னு நீ வந்துகீரியே… அதான்..என இழுத்த ஆயாவிடம்

அத்தவுடு ஆயா இன்னாமா எளச்சிக்கீர.. நாஸ்டா டெய்லி துன்னீவியா மாட்டியா ? என்றான் பாசம் பொங்க.

எங்க…நைனா கடையான்ட போவ்வே பேஜாராகீது யாரும் கண்டுக்கமாட்டானுங்க அப்பால சிங்கிள் டீ குச்சாலே அன்னைக்கி புல்லா வயிறு டம்முன்னுகீது எப்படி நாஸ்டா துன்ரது. ஏதோ அனாதி துட்டு வர்றத வச்சிகீனு வண்டி ஓட்டுறேன் என சலித்தப்படியே கூறிய ஆயாவை இடைமறித்து.

ஆயா இன்னைக்கி நீ நாஸ்டா துன்ர என்ற படியே அவளது பதிலை எதிர்பார்காமல் நகர்ந்தவனை

பார்த்தப்படியே யாரு பெத்த கொயந்தையோ இந்த வயசுல இன்னா பாசம் இன்னா பேச்சி நல்லா இருக்கனும் என மனதில் சொல்லிக்கொண்டாள்.

சிறிது நேரத்தில் பார்சலோடு வந்தவன் ஆயா இத்த துன்னு வேலக்கீது அப்பால வர்றேன் என்றபடியே கன்னத்தை வருடி சென்றான்.

மறுநாள் காலை பார்சலோடு வந்த இளைஞன் கேட்ட முதல் கேள்வியே இன்னா…ஆயா நாஸ்டா நல்லாயிருந்துதா ? என்று நேற்று வாங்கி கொடுத்ததை நினைவுப்படுத்தினான்.

நைனா நாலு இட்லி என்னால் துன்ன முடியுமா ? அத்தான் ரெண்ட துன்னுட்டு அப்பால நாய் கைய்ல போட்டுட்டேன்
நைனா இட்லின்னா ரெண்டு இல்லாங்கட்டி சிங்கிள் டீ பட்டர்பிஸ்கெட் ரெண்டு போதும் கண்ணு துட்டு வேர கைய்ல கொஞ்சமாகீது என்ற ஆயாவை கோவத்தோடு பார்த்தப்படியே…

ஆ…யா இன்னா..நீ துட்டு கிட்டுன்னு கூவி பேஜார்பண்ற .அப்பால நா…ஊட்டான்ட வரமாட்டேன் இத்தேகண்டி உன் பேரப்புள்ளையா இருந்தா இப்டி சொல்லுவீயா என்றான்.

இல்ல..நைனா என ஏதோ சொல்ல வந்தவளை தடுத்து சாப்பிடு என சைகை செய்தான்.

இரண்டு வாய் எடுத்து வைத்தவளுக்கு தொண்டை கட்ட தண்ணி ஒரு டம்ளர்எடுத்து குடி ஆயா என சொன்னபோது

தெருமுனையில் ஆட்டோ ஒன்று மெல்ல ஊர்ந்து வந்தது அதில் கட்டியிருத்த மைக் செட்டில் யாரோ ஒருவன் யாரோ ஒருத்தனுக்கு ஓட்டு கேட்டு அக்கா, அம்மா என கூவிக்கொண்டிருந்தான். இதை கேட்ட இளைஞன்

பேமானி பசங்க இத்தே….வேலையாக்கீது த்..தா ஓட்டு போட்டா அத்தோட சரி கண்டுக்கவே மாட்டானுங்க..கயிதைங்க இவனுங்களை ஒன்னியூம் சொல்லக்கூடாது நம்பள சொல்லனும் இன்னா…ஆயா என்றான். ஆட்டோவை பார்த்தப்படியே.

சர்தான் நைனா… போனதபா இந்த கவுன்சிலர் பையன் ஆயா உனக்கு அந்த வாங்கிதர்றேன் இந்த வாங்கிதர்றேன்னு ஏமாத்திட்டாம்பா என்றபடியே இரண்டாவது இட்லியை ஆரம்பித்தாள்.

ஒரு வாரகாலம் ஆயா…நாஸ்டா… பேரன். என உருண்டோட வழக்கமாய் வரும் நைனாவை அன்று காலை காணாது ஆயா பதற்றமாய் இருந்தாள்.

திடீரென வந்தவன் ஆயா ஒரு முக்கியமான வேலக்கீது அதான் நாஸ்டா வாங்க மறந்துட்டேன் சாரி ஆயா என்றான் தயங்கியபடி

அட இன்னா நைனா ஜோலிக்கீதுன்னா பார்க்க வேண்டியது தானே கெழவி ஓடியாப்போகப்போறேன் என்றவள். அப்டி இன்னா..நைனா ஜோலிக்கீது என்றாள்.

அத்தான் ஆயா எலெக்‌ஷன் வந்துகீதே அதுக்கு நம்ம வோட்டு போடாட்டா எந்த கஸ்மோலமாவது போட்டு புடுவான். அப்பால் கெட்டப்பசங்க ஜெயிச்சி பேஜார்பண்ணிடுவானுங்க அத்தான் அர்ஜெண்டா கெளம்பிக்கீனுகிரேன் என சொல்லி நிறுத்தி நீ போலீயா..ஆயா என்றான்.

யாரு வந்து இன்னா ஆவபோது நைனா இத்தே…. ஓல குட்சத்தான் , வயித்துபாட்டுக்கு டீயும் பன்னும் தான் என்றாள் சலிப்பாக…

அப்டி இல்ல ஆயா..நம்ம கைய்லகீர ஒரே ஆயுதம் வோட்டு தான் ஆயா நீ போடுலன்னா எவனாவது பேமானி குத்திட்டு போய்கீனே…இருப்பான். இன்னா..வோ ஆயா மனசுல பட்டுச்சி உங்கைய்ல சொன்னேன் அப்பால…உன் விருப்பம்.

நைனா நீ பேஜாராவாதே..
கரெக்ட்டாத்தான் சொல்லிக்கீர அடுத்த தபா நான் கீரேனோ புட்டுக்கினு போரேனோ சரி நானும் வர்றேன் என்றவளை கைத்தாங்கலாக அழைத்து வந்து ஆட்டோவில் ஏற்றினான்.

ஆயாவும் அந்த இளைஞனும் வாக்கு சாவடி விட்டு வெளியே வந்தனர்.

ஆயா… எதுக்கு ?வோட்டு போட்ட

நைனா நீ சொன்ன ஆளு சின்னத்துல தான் குத்துனேன். எம்பேரன் நீ சொல்லி மாறுவேனா என்றாள் பாசம் பொங்க.

சரி ஆயா நீ ஆட்டோல வீட்டுக்கு போ எனக்கு கொஞ்சம் ஜோலிக்கீது அப்பால வர்றேன் என வந்த ஆட்டோவில் ஏற்றி ஏம்ப்பா இது எங்க ஆயா பத்திரமா வூட்டான்ட ஏறக்கி வுட்டுறு என ஆட்டோகாரனிடம் பணம் கொடுத்த அந்த புது பேரனைப்பார்த்தப்படியே.

நைனா…செத்து போன
நாக்க நீ நாஸ்டா குடுத்து ஆசைக்காட்டிட்ட..
வரசொல்ல..எனக்கு ஆப்பமும் வடக்கறி வாங்கினு வர்றீயா?
என்று தயங்கிபடி கேட்டவளை பார்த்து சரி என்றபடியே பலமாக தலையாட்டினான்.

மாலை மணி ஆறாகியும் அந்த பேரன் ஆயாவை தேடி வரவில்லை. என்னாச்சோ… ஏதாச்சோ என பேரனை நினைத்து பதட்டப்பட்டுக்கொண்டிருந்த ஆயாவுக்கு தெரியாது.

இளைஞன் ஆயாக்கணக்கு, ஆட்டோக்கணக்கு என எழுதி வைத்துக்கொண்டு ஏரியா கவுன்சிலர் வீட்டில் காத்திருந்தது.

எழுதியவர்:
எம்.எஸ்.மதுக்குமார்

ஓவியம்:
அன்புசித்திரன்

About ThagavalAdmin@123

Check Also

தொல்லுயிர் வரலாறு ஆவணப்படுத்தும் எம் ஆர் சி கல்லூரி.

தொல்லுயிர் வரலாறு ஆவணப்படுத்தும் எம் ஆர் சி கல்லூரி. 35000 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கால அளவில் தற்போதுள்ள அரியலூர் …

One comment

  1. பேமானி பசங்க எவனையும் நம்பக்கூடாது. ஓட்டு விஷயத்தில் எவன் பேச்சையும் கேட்க கூடாது என்று புரிய வைத்து விட்டீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *