காவிரி பிரச்சனையில் தேசிய தலைவராக பிரதமர் நடந்துக் கொள்ளவில்லை
கே.பி.முனுசாமி குற்றசாட்டு
அரியலூர் அண்ணா சிலை அருகே அதிமுக சார்பில் காவிரி உரிமை மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கலந்துக் கொண்டு பேசியதாவது: காவிரி பிரச்சனைக்காக உச்சநீதி மன்றம் வரை சென்று வெற்றிக் கண்டவர் ஜெயலலிதா. ஆனால், காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து அதனை செயல்படுத்தும் தேசிய தலைவராக நரேந்திரமோடி இல்லாமல் சில லட்சம் ஓட்டிற்காக அரசியல் தலைவராக நடந்துக் கொண்டார்.
சத்தியத்தையும், தர்மத்தையும், நியாயத்தையும், சட்டத்தையும், நல்லதீர்ப்பையும் தலைவணங்காமல் தற்போதைய பிரதமர் நடந்துக் கொண்டுள்ளார். இந்த நிலை நீடித்தால் நீங்கள் எதிர்பார்க்கும் இந்தியா நிச்சயமாக இருக்காது என எச்சரிப்பதாக கூறினார்.
காவிரி நதி நீர் உரிமைக்காக திமுக எதையும் செய்யவில்லை.
1970 ம் ஆண்டிலேயே காவிரி பிரச்சனை உருவெடுத்த போது, 1971 ல் அப்போதைய தி.மு.க. அரசு சட்டப்பேரவையிலும், சட்ட மேலவையிலும் தீர்மானம் நிறைவேற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் 1972 ம் ஆண்டில் அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த வழக்கை கருணாநிதி வாபஸ் பெற்றார்.
இந்த வழக்கை தொடர்ந்து நடத்தியிருந்தால் காவிரி பிரச்சினைக்கு அப்போதே தீர்வு ஏற்பட்டிருக்கும். மக்களை பற்றி கவலைப்படாத அரசாக தி.மு.க. அரசு இருந்தது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரித்தில் இருந்த தி.மு.க. காவிரி பிரச்னையில் எதையும் செய்யவில்லை.
1986 ல் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். வலியுறுத்ததின் பேரில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தினார். 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அதன் பலனாக நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காவிரி பிரச்னைக்காக தொடர்ந்து சட்டப் போராட்டத்தின் காரணமாக உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆணையத்திற்கான உறுப்பினர்களையும் தமிழகம், கேரளம், புதுச்சேரி அரசுகள் வெளியிட்டு விட்டன. ஆனால் கர்நாடகம் மட்டும் உறுப்பினர்கள் பெயரை வெளியிட மறுக்கிறது. அதனால் தான் டெல்லி சென்ற முதல்வர் காவிரி ஆணையத்தை கூட்ட வேண்டும். எங்களுக்குரிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார் என்றார்.
கூட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். தலைமை கழக பேச்சாளர்கள் கவிஞர் முத்துலிங்கம்,ஏ.ஜே.ஏங்கல்ஸ், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ., ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், எம்.பி.சந்திரகாசி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.