கோடி கணக்கில் பணம் பாக்கி தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், அப்பகுதி கரும்பு விவசாயிகளுக்கு 2013-17-ம் ஆண்டு வரை ரூ.44 கோடி நிலுவைத் தொகை தரவேண்டும். தற்போது இந்த சர்க்கரை ஆலையானது, வெறும் ரூ.4 கோடி மட்டுமே கரும்பு விசாயிகளுக்கு அளித்துள்ளது. ஆனால், மீதத்தொகையை வழங்காமல், 4 ஆண்டுகளுக்கு உண்டான தொகை முழுவதுமாக கொடுத்து விட்டோம் என உறுதிமொழி கடிதத்தை விவசாயிகளிடம் பெற்று வருவதாக புகார் எழந்ததை யடுத்து
அப்பகுதி கரும்பு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிம் புகார் மனு அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை முழுவதையும் வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் மூ.மணியன், மாவட்ட துணைச் செயலாளர் பிச்சைப்பிள்ளை, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் வரபிரசாதம், பொருளாளர் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக்குழு உறுப்பினர் சாமித்துரை, முன்னாள் ஊராட்சித் தலைவர் கங்காதுரை, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ரவிச்சங்கர், மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் ஆகியோர் அரியலூர்-தஞ்சை சாலையில் சர்க்கரை ஆலைமுன்பு மறியலில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர் போலீஸார், மறியலில் ஈடுபட்ட 8 பேரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.