செந்துறை அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் கேட்டு நோயாளிகள் போராட்டம்
அரியலூர் மாவட்டம் செந்துறையில் இயங்கி வரும் அரசு பொதுமருத்துவமனையில், 3 மருத்துவர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், ஒரு மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டதால் 2 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். இதில், ஒரு மருத்துவர் விடுப்பில் உள்ளதால் கடந்த சில நாட்களாக ஒரு மருத்துவர் மட்டுமே அனைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளதால் உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் என அனைத்து நோயாளிகளும் சிகிச்சை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக கூறி நோயாளிகள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொது மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தகவலறிந்து வந்த செந்துறை போலீஸார், நோயாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மருத்துவத்துறை உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.
இதனையடுத்து, பொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து ஒரு மருத்துவர் செந்துறை பொதுமருத்துவமனைக்கு வந்து சிகிச்சைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது இந்த பொது மருத்துவமனை கடந்த பத்தாண்டுக்குமேலாக செயல்பட்டு வந்தாலும் போதிய டாக்டர்கள், ஊழியர்கள் பணியாளர்கள் இன்றி செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.