ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியின் முதல்வருக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது-. விழாவிற்கு பள்ளி தாளாளர் முனைவர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு 2018 – 19 கல்வியாண்டு முதல் 1,6,9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் உலகத்தரம் வாய்ந்த அளவில் வெளியிடப்பட உள்ளதாக அறிவித்திருந்தது. அதை கருத்தில் கொண்டு 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு செல்ல இருக்கின்ற மாணவர்களுக்கு கடந்த ஆண்டிலேயே பள்ளியில் பயிலும் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சியாக உலகத்தரம் வாய்ந்த அறிவியல், கணிதம் பாடங்களை பயிற்றுவித்தமைக்கு முதல்வர் தனலெட்சுமியை பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் பாராட்டி வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் பழனியப்பன் , இலையூர் சங்கர் ஆகி யோர் வாழ்த்தி பேசினர் . இதுகுறித்து பள்ளி முதல்வர் தனலெட்சுமி பேசும்போது
அரசு கொண்டுவரும் புதிய பாடத்திட்டங்களை மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையிலும் உலகத்தரத்தில் கல்வியை பெறும் வகையிலும் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 2017 ஜுன் மாதத்திலிருந்தே கூடுதல் பயிற்சியை முற்போக்கு சிந்தனையுடன் வழங்கினோம். தமிழ்நாட்டிலேயே இம்முயற்சி இப்பள்ளியில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு பெற்றோர்கள் பாராட்டும் வகையில் வெற்றி பெற்றுள்ளோம். மாணவர்களுக்கு பாடங்களையும் தாண்டி சர்வதேச அளவில் சிந்திக்க கூடிய மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பது பள்ளியின் நோக்கம் ஆகும். வருகின்ற கல்வியாண்டுகளில் இதுபோன்ற புதுமையான வடிவில் கூடுதலாக பயிற்றுவிக்க உள்ளோம் என்று கூறினார். முன்னதாக பள்ளி துணை முதல்வர் தாரணி வரவேற்றார். இறுதியில் ஆசிரியர் வைத்திலிங்கம் நன்றி கூறினார்.