பொறுப்புள்ள பொறியாளர் இவருங்க என நம்மை கடந்து சென்ற ஒரு இளைஞரை கை காட்டினார்கள் அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பெரியவர்கள்.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகேயுள்ள இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்த அந்த இளைஞரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். அவர் தான் ஆனந்த் 29 வயது இளம் பொறியாளர் , இயற்கை வேளான் விவசாயி, பனை மரங்களின் பாசத்திற்குரியவர்.
சார் உங்களை பற்றி சொல்லுங்களேன்.
படிக்கிற காலத்திலேயே நம்மாழ்வார் அய்யா ரொம்ப பிடிக்கும் அவரைப்பற்றி வரும் செய்திகள், பேச்சுகள் எல்லாம் எனக்கு ஒரு இனம் புரியாத ஈர்ப்பை உண்டாக்கும். பொறியியல் படிப்பு முடிஞ்சி வேலைக்கு போய்விட்டேன்.
2013 ல் அய்யா நம்மைவிட்டு போய்ட்டாங்க… அடுத்து ஒரு புயலில் தமிழகத்தில் பெரும்பாலான மரங்கள் சேதத்தை சந்தித்தது இந்த ரெண்டு நிகழ்வுமே எனக்கு ஏதோ பண்ண ஆரம்பிச்சது. இயற்கையும் போச்சு ,அதை எடுத்து சொன்னவரும் இல்லை சரி நாம ஏதாவது பண்ணுவோம் என வேலையை உதறிவிட்டு சொந்த கிராமத்துக்கு வந்துட்டேங்க… கோட்டுசூட்டோடு நகரில் வலம் வரவேண்டிய பையன் திடீர்னு கிராமம் வந்து விவசாயம் பண்றேன்னு சொன்னா என்ன நடக்கும் நடந்ததை ஆனந்தே கூறுகிறார். ஊரில் எல்லாம் ஒரே கேலி கிண்டல் அப்பாவும் என்னப்பா இப்படி பண்ணிட்டியேன்னு வருத்தப்பட்டாரு. அப்பா பணம் எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் நாம வாழ்ற வாழ்க்கை ஆரோக்கியமா இருக்கனும். அதுக்கு நான் முயற்சி பண்றேன்னு சொன்னப்ப அப்பா நம்பினார் அந்த ஊக்கம் தான் ஒரளவு என்னை நிலைநிறுத்தி இருக்கு என்கிறார் தன்னடக்கத்தோடு.
பனை மரங்களை பரவ செய்ததில் ஆனந்தின் பங்கு அளப்பரியாது தனது இரு சக்ரவண்டியை எடுத்துக்கொண்டு பனம்பழம் பொறுக்குவது. அதை ஏரி, மற்றும் பள்ளி வளாகங்கள் என சுற்று வட்டாரத்தில் பக்குவமாய் நடவுசெய்து வந்தவருக்கு உள்ளூர் இளைஞர்கள் ,இணைய நண்பர்கள் என மெல்ல மெல்ல உதவ முன்வந்தார்கள் இப்படி 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் இவரால் 5 லட்சம் பனை விதைகள் சென்று வளர்ந்து வருகின்றன. அது என்ன சார் ? பனைமரத்து மேலே மட்டும் பாசம் அதிகம் என்றால்.தாத்தா எங்க நிலத்துக்கு உயிர்வேலியா அந்த நாளிலேயே பனைமரத்தை தான் வளர்தாங்க அதை பார்க்கும் போதெல்லாம் தாத்தாவை பார்ப்பது போல் இருக்கும் என சிரித்தவர்.
சார் பனை ஒரு அற்புதமான மரம் நீர்நிலையை காப்பது. நிலத்தடி நீரை பாதுகாப்பது.வறட்சி தாங்கி வளர்வது ஒரு செலவும் இல்லாத வருமானம் தரக்கூடியதுன்னு இது ஒரு அற்புதம் அதான் இதை தேர்தெடுத்து ஆண்டுகளில் வரும் பருவத்தில் விதைப்பதும், தேவைப் படுவோருக்கு அனுப்புவதுமாய் இருக்கேன் எனும் இளம்தலைமுறை விவசாயி நாட்டு விதைகளை வைத்து ரசாயன கலப்பற்ற நெல் , காய்கறி என உற்பத்தி செய்தும் வருகிறார் இவரை பற்றி அறிந்த அரசியல் பிரமுகர் சைதை.துரைசாமி இருபத்தையாயிரம் பனை விதைகளை பெற்றுள்ளார். வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தனது கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து ஆனந்திடம் பேசவைத்ததோடு ஒருலட்சம் பனை விதைகளை விதைத்துள்ளார்.
சார் உங்ளால மறக்கமுடியாத நிகழ்வு ?
2016 _17 காலகட்டத்தில் ஏரிகரையில் நான் வைத்த பனைகள் துளிர்விட்டது இப்ப நெனச்சாலும் சிலிர்க்கும்.கும்மிடிபூண்டி பகுதி இளைஞர்கள் திடீர்னு போன்ல உங்களை பார்த்து தான் ஆயிரம் பனை நடுகிறோம் என்றது மறக்க முடியாத நிகழ்வு என சொல்லி விட்டு பத்து மரம் இருந்தா போதும் சார் ஒரு சிறுகுடும்பத்துக்கு 7 முதல் 8 மாதம் வரை வருமானம் கிடைக்கும் நீங்களும் முயற்சி பண்ணுங்க என்றபடியே கை கூப்பினார். நாமும் உழுதுண்டு வாழும் இளம் இந்தியாவை தொழுதுண்டு வந்தோம் .
செய்தி : எம்.எஸ்.மதுக்குமார்