விந்தை மனங்கள்..!
எழுத்தாளர் வே.குமரவேல்.
1) தொழிலில் நல்ல திறமை இருக்கிறது பல தரபட்ட மக்களிடம் கலந்து பழகி ஒருங்கிணைங்கும் ஆற்றலும் சமூக நல்லிணக்கமும் சுற்றம் சூழ்ந்த நட்பும் இருக்கின்ற இளைஞர்கள் பலருக்கு, முதலீடும், வாய்ப்புகளும் இல்லாத நிலையை பார்க்கின்றோம். மிக குறைந்த மூலதனமும் ஒரே ஒரு வாய்ப்பும் கூட இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.
“நேரம் சரியில்லை”
என்கிறோம்
“அவன் நல்லவன் தான். திறமைசாலிதான். பாவம்இன்னும் நேரம் தான் வரவில்லை கஷ்டபடுகிறான்” என்பார்கள்.
படித்தால் மட்டும் போதுமா ?… என்பதை போல பணம் இருந்தால் மட்டும் போதுமா ?
மூலதனம் மட்டுமிருந்தால் போதுமா?
ஒருவர் வெளிநாடு சென்று சில கோடி சம்பாதித்து திரும்பியுள்ளார். இனி வெளிநாட்டு வாசம் இல்லை. என நினைத்து உள்ளூரில் ஏதாவது தொழில் செய்து காலத்தை ஓட்டலாம் என கருதுகிறார். ஏதாவது பிஸ்னஸ் செய்யவேண்டும் என்று ஒராண்டாக சொல்லி வருகிறார் ஆனால் இன்னும் தொடங்கவில்லை அந்த வாலிபர்.
ஒரு மிராசுக்கு பனிரெண்டு ஏக்கர் நிலம் உள்ளது ஒரு சென்ட் இரண்டு லட்சம் போகிறது. பனிரெண்டு ஏக்கருக்கான மதிப்பை கணக்கிடுங்கள் மொத்த நிலத்தையும் விவசாயம் செய்யாமல் , மரப்பயிர் செய்து தோப்பாக்காமல் வெறுமனே போட்டு வைத்துள்ளார். அவரும் வாலிபர் தான் ! சொன்னால் நம்பமாட்டீர்கள் காலை மணி ஆறுக்கெல்லாம் கூலி வேலைக்கு சென்று இரவு ஏழு மணிக்கு தான் வீடு திரும்புவார்.
முதலீடு இருப்பர்க்கு மூளையில்லை. மூளையும் முனைப்பும் கொண்டோருக்கு முதலீடு இல்லை.
மூளையில்லை என்றால் தன்னம்பிக்கை இல்லை , வியாபார துணிச்சல் இல்லை , உழைக்கும் திறன்இல்லை .
என்ன செய்ய வேண்டும் ?